ராகுல்காந்தி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக பேச வேண்டும்! சவுகிதார் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி:

ராகுல் காந்தி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக பேச வேண்டும் என்று கூறி, சவுகிதார் வழக்கை உச்சநீதி மன்றம் முடித்து வைத்தது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில்  ஊழல் நடத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட பாஜக மூத்த தலைவர்களான யஷ்வந்த்சின்கா உள்பட பலர் குற்றம் சாட்டினர். இதுதொடர்பான வழக்கின்  விசாரணை யின்போது, முதலில் உச்சநீதி மன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில், ஊடகங்களில் ஆவனங்கள் வெளியான நிலையிலும், மறுசீராய்வு மனுக்கள் தாக்கப்பட்ட தாலும், வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதி மன்றம் சம்மதம் தெரிவித்தது.

இதுகுறித்து பேசிய அப்போதைய காங்கிரஸ் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, ரஃபேல் ஒப்பந்தத்தில்  முதலில் போடப்பட்ட உண்மையான ஒப்பந்தத்தை மாற்றி ரூ 1600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு தெரியும். இந்த ஒப்பந்தம் மூலமாக பணத்தை திருடியதே  ‘சவுகிதார்’ என்னும் காவலாளிதான். (chowkidar chor hai) ஆனால், இதுகுறித்து அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மறைந்த மனோகர் பரிக்கர் தனக்கு எதுவும் தெரியாது என்றும், இதுகுறித்து, பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதில், பிரதமர் மோடியை குறிப்பிட்டு ராகுல்காந்தி பேசியதாக கூறி, பாஜகவை சேர்ந்த எம்.பி. மீனாட்சி லேகி என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி ஏற்கனவே நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிவிட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

ராகுல்காந்தி மீதான வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்த உச்சநீதி மன்றம், எதிர்காலத்தில் ராகுல்காந்தி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறி வழக்கை முடித்து வைத்தது.