நாடு முழுமைக்கும் ஒரே பொதுச் சிவில் சட்டம் அமைக்காத மத்திய அரசு : உச்சநீதிமன்றம் அதிருப்தி

டில்லி

த்திய அரசு இதுவரை நாடு முழுவதும் ஒரே பொதுச் சிவில் சட்டத்தை அமைக்காததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை நீதிபதிகள் தீபக் குப்தா  மற்றும் அநிருத் போஸ் ஆகியோரின் அமர்வு விசாரித்தது.  இந்த அமர்வு, “ஒரு நாள் பொதுச் சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். அத்துடன் மத ரீதியான நம்பிக்கைகள் அடிப்படையிலான திருமண தனிச்சட்டங்கள், விவாகரத்து சட்டங்களை மாற்றி சிவில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் நம்பினார்கள்.

நாடு முழுவதும் ஒரே  பொதுச் சிவில் சட்டம் மக்களைப் பாதுகாக்கும் வகையில்,கொண்டு வரப்படும் என, மாநிலங்களின் கொள்கைகள் குறித்து விவரிக்கும் சட்டப்பிரிவு 44 ல் 4வது பத்தியில் தெரிவித்திருந்தனர். இதற்காக, இன்று வரை எந்த முயற்சியும் மத்திய அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த 1956ல் ஹிந்து சட்டங்கள், நெறிமுறை படுத்தப்பட்டன.   ஆயினும் நாடு முழுவதும், அனைத்து மக்களுக்கும் பொருந்தும் வகையில் சிவில் சட்டம் கொண்டு வர எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  அதன் பிறகு கடந்த 1985 ல் இரண்டு வழக்குகளில், சிவில் சட்டம் குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

ஆனாலும் மத்திய அரசு இதுவரை இது குறித்து எதுவும் செய்யாமல் காலம் கடத்தி வருகிறது.   இத்தகைய பொதுச்.சிவில் சட்ட விவகாரத்தில், கோவா மாநிலம்  ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. அங்கு  அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொதுச்  சிவில் சட்டம் உள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.