மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம்! புதுச்சேரி வழக்கில் உச்சநீதி மன்றம் நெத்தியடி

டில்லி:

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் என்று புதுச்சேரி மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடியின் தலையீடு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் நெத்தியடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டதில் இருந்து, மாநில அரசுக்கு கடும் தொல்லைகள் கொடுத்து வந்தார்.  இதன் காரணமாக மக்கள் நலப்பணிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தது. இதன் காரணமாக முதல்வருக்கும், கவர்னருக்கும் அடையே அதிகார மோதல் தீவிரமடைந்து வந்தது.

கிரண்பேடிக்கு ஆதரவாக மோடி அரசின்  மத்திய உள்துறையும் செயல்பட்டு வந்தது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையில், அரசின் ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அதிகாரம் வழங்கியது.

இதன் காரணமாக மாநில அரசின் நிர்வாக பணிகள் முடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கியது.

இந்த நிலையில், கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட சிறப்பு  அதிகாரத்தை எதிர்த்து, காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில், புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகார மில்லை என்று கூறிய மதுரை உயர்நீதி மன்றம், கிரண் பேடிக்கு வழங்கப்பட்ட மத்திய உள்துறையின்  கூடுதல் அதிகாரத்தை ரத்து செய்து பரபப்பு தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து, கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை சார்பில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. இந்த மனுமீதான கடந்த விசாரணையை தொடர்ந்து. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு  இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்ட நிலையில், மாநில அரசு எந்தவிதமான முடிவும் எடுக்கக்கூடாது என்று தடை விதித்தனர்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறையின் மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்,   புதுச்சேரி அமைச்சரவை முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடையையும் நீதிபதிகள் நீக்கினர்.

மேலும், இது தொடர்பாக  கிரண்பேடி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி முறையிட்டு தீர்வு காணலாம் என்று கூறினர்.

உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநில அரசுகளுக்கு தொல்லை கொடுத்து வரும் ஆளுநர்களுக்கு விழுந்த சம்மட்டி அடி  என்று விமர்சிக்கப்படுகிறது.