கொரோனா சிகிச்சை – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி:

கொரோனாவால் இறந்தவர்களின் அடக்கம் செய்தல் தொடர்பாக விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்களை தடுக்க முடியாமல் அரசுகள் கையை பிசைந்தே நிற்கின்றன. மனித குலத்தின் இயல்பு வாழ்க்கையையும், அரசுகளின் சுமுக செயல்பாட்டுக்கும் இந்த கொரோனா தொடர்ந்து தடை போட்டு உள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கைவரப்பெறாததால் கொரோனாவின் வெறியாட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து படுபாதக செயல்களை அரங்கேற்றி வரும் கொரோனா இந்தியாவையும் நிலைகுலையச் செய்து வருகிறது. இங்கு தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றுநோய்களின் போது வயதானவர்களுக்கு போதுமான வசதிகளைக் கோரும் மனு தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம்,  கொரோனாவால் இறந்தவர்களின் அடக்கம் செய்தல் தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல் வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.