டெல்லி: சட்டமன்ற பேரவையில் ஆயுட்காலம் முடிவடையும் முன்பு  தேர்தல் நடத்தக்கூடாது என்றும், அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்க உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாடு சட்ட மன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியும்,  புதுச்சேரி மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 4ஆம் தேதியும், கேரள மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடனும், அசாம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 23ஆம் தேதியும்,  மேற்கு வங்க சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 26ஆம் தேதியுடனும் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி, தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6நதேதியும், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் கடந்த 6-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவில்,  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள  5 மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே தேர்தல் நடைபெற உள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் பொதுவானவர் என்பதால் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.  விசாரணையைத் தொடர்ந்து, 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு தடை விதிக்கமுடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.