பசு பாதுகாப்பு கும்பலால் வாலிபர் கொலை….ராஜஸ்தான் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

டில்லி:

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் அல்வார் மாவட்டத்தில் பசுக்களை ஓட்டி சென்ற அக்பர் கான் (வயது 28) என்ற வாலிபர் கடந்த 21ம் தேதி பசு பாதுகாப்பு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைவர் தெஹ்சீன் பூனவாலா மற்றும் துஷார் காந்தி ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பான பிரதான வழக்குடன் சேர்த்து அவமதிப்பு வழக்கையும் ஆகஸ்ட் 28ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.