டில்லி:

ர்நாடக அரசு சம்பந்தப்பட்ட 2 மனுக்கள் இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 15 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றது தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, கட்சித்தாவல் தடைச்சட்டம் குறித்து, விளக்கம் கேட்டு கர்நாடக் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதேவேளையில், கர்நாடக அரசு மெஜாரிட்டி நிரூபிக்க உத்தரவிட்டு கவர்னர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முதல்வர் குமாரசாமி தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்த இரு வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே கர்நாடக மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது கடந்த 18, 19ந்தேதி விவாதங்கள் நடைபெற்ற நிலையில், சபாநாயகர் சபையை ஒத்தி வைத்து விட்டார். இன்றும் விவாதம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விவாதங்கள் முடிந்த பிறகே வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் உறுதியாக அறிவித்து விட்ட நிலையில், இன்று சபை கூடியதும் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் பலர் பேசவுள்ளனர்.  விவாதங்கள்  எப்போது முடியும் என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் 2 நாட்களுக்கு விவாதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விவாதம் நிறைவடைந்த பிறகே, அதற்கு பதிலளித்து முதல்வர் குமாரசாமி பேசுவார்.  அதன் பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பாஜக, பேரவைத் தலைவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தை அணுகியிருப்பதால், உச்சநீதி மன்றத்தின் உத்தரவைப் பொறுத்தே கர்நாடக சட்டசபையின் போக்கு மாறும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில்,  கர்நாடகத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், சங்கர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், கர்நாடகப் பேரவையில் திங்கள்கிழமை (இன்று)  கண்டிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இவர்கள் இருவரும் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கர்நாடக அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.