டெல்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கலத் தலைவர் சோனியா காந்தியை அவதூறாக  விமர்சித்த பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை 3 வாரத்துக்கு கைது செய்ய உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி ஊடகமான ரிபப்ளிக் டிவியில்,  மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத் தில் இந்து துறவிகள், கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தை பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி நடத்தினார். விவாதத்தின்போது,  இந்த  கொலையை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியவர், அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் அள்ளி வீசினார்.

அர்னாப்பின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  அவர்மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடைபெற்றது.  இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சில நபர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக மும்பை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், அர்னாப் மீது பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார் பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் காங்கிரஸ் பாஜக இடையே கருத்து மோதலை உருவாக்கியது. சமூக வலைதளங் களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் தன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து அர்னாப் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில்,  இரண்டு மர்ம நபர்கள் தன்னைத் தாக்க எப்படி முற்பட்டனர் என்பது குறித்து விளக்கி இருந்தார். மேலும், தன்னைத் தாக்கிய இருவரும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில்,   அர்னாப் கோஸ்வாமி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்கு களை எதிர்த்து அர்னாப் கோஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த விசாரணையைத் தொடர்ந்து, அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய 3 வாரம் தடை விதித்த உச்சநீதிமன்றம், அவர்மீது நாக்பூரில் பதிவான 238/2020 எனும் FIR மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் போதும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி கூறியது  என்ன?

பால்கர் மாவட்டத்தில் இந்து துறவிகள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை குறிப்பிட்டு பேசிய அர்னாப், தான் கேட்ட கேள்விகள் குறித்து பதிலளிக்க தைரியமில்லாதவர் சோனியா காந்தி என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும்,  தனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு முழு காரணம் சோனியா காந்தி மற்றும் வாத்ரா குடும்பமும்தான் என்றும், தன்னுடைய கேள்விகள் இன்னும் கடுமையாக இருக்கும் என்றும்  எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.