உச்சநீதிமன்றம் சுற்றுலா தலம் அல்ல…வருமான வரிந்துறைக்கு நீதிபதி கண்டனம்

டில்லி:

உச்ச நீதிமன்றம் சுற்றுலா தலம் அல்ல என்று வருமான வரித் துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் ஹாப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் தொடர்பான ஒரு வழக்கை வருமான வரித்துறை தீர்ப்பாயம் விசாரித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.

2016, ஆகஸ்ட் 29ம் தேதி இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், வருமான வரித்துறை மேல் முறையீடு செய்தது. நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கூறுகையில்,‘‘ இந்த வழக்கை, வருமான வரித்துறை மிக சாதாரணமாக கையாண்டிருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. 596 நாட்கள் தாமதமாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தாமதம் தொடர்பாக, போதுமான, ஏற்கக்கூடிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

உச்சநீதிமன்றத்தை இவ்வளவு மோசமாக நீங்கள் நடத்தக்கூடாது. உச்ச நீதிமன்றம், சுற்றுலா தலம் அல்ல. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நேரத்தை வீணடிக்கும் வகையில் மனு தாக்கல் செய்த வருமான வரித்துறைக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சிறார் நீதிமன்ற செலவுகளுக்கு பயன்படுத்தலாம்’’ என்றார்.