டில்லி:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக 4 மூத்த நீதிபதிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டி அளித்தனர். வழக்குகள் ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக செயல்ப டுவதாக குற்றம்சாட்டினர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நான் தான் நீதிபதிகள் குழுவுக்கு தலைவன். அதனால் இதை நான் தான் முடிவு செய்வேன் என்று தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மூத்த வக்கீல் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராக சில தினங்களுக்கு முன்பு பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வழக்குகள் ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படை தன்மை இல்லை. இதற்கு வழிகாட்டுதலை அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதிக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. வழக்குகள் ஒதுக்கீடு செய்வதை அரசியலமைப்பு அதிகாரம் தான் முடிவு செய்கிறது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இப்படி தலைமை நீதிபதிக்கு எதிராக அஸ்திரங்கள் தொடுக்கப்பட்டு வரும் நிலையில் மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடிப்பதை நீதிமன்றம் அனுமதித்தால் வரலாறு நம்மை மன்னிக்காது. கொலிஜியத்தின் 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தொடர்பான பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.

வரலாற்றிலேயே முதன்முறையாக தற்போது தான் இப்படி நடக்கிறது. மூன்று மாதம் ஆகியும் கொலிஜியத்தின் பரிந்துரை என்ன ஆனது? என்பது கூட தெரியாதநிலை உள்ளது. இந்த பிரச்னையை சுயமாக எடுத்து விசாரிக்க 7 மூத்த நீதிபதிகள் கெண்ட அமர்வை தலைமை நீதிபதி நியமனம் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் மூத்த வக்கீல் இந்து மல்கோத்ரா, உத்தர்காண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதன் காரணமாக தான் நீதிபதி ஜோசப் குரியன் காட்டமாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.