டில்லி,

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது அதிருப்தி தெரிவித்த மூத்த நீதிபதிகள் 4 பேர் நேற்று தங்களது பணியை வழக்கம் போல செய்தனர். இந்நிலையில்,  நீதிபதிகள் இடையேயான பிரச்சினை முடிவுக்கு வந்தது என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா தெரிவித்தார்.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர்  ஆகியோர் அதிருப்தி தெரிவித்து பத்திரிகையாளர்களை சந்தித்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து,  இந்திய பார்கவுன்சில் கூடி அவசர ஆலோசனை நடத்தியது. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பார் கவுன்சில் தலைவர், தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் சிலர் வெளிப்படையாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியது துரதிருஷ்டவமானது. இதை தவிர்த்திருக்கலாம். இதுபோன்ற விசயங்கள் பொதுவெளியில் விவாதிப்பதால் நீதிபதி மீதான மரியாதை பலவீனப்படும் என்றும், அவர்களுக்கிடையே எழுந்துள்ள பிரச்சினை குறித்து பேச 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

பார்கவுன்சில் தலைவர் மன்னன் மிஸ்ரா

இந்த குழு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை  பொங்கல் அன்று (ஜன.,14) சந்தித்து பேசியது. சுமார் 50 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

இந்நிலையில்,  பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று நீதிபதிகள் வழக்கம்போல் தங்கள் பணியை மேற்கொண்ட னர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன்குமார் மிஸ்ரா, நீதிபதி கள் அவர்களுக்குள்ளேயே பேசி பிரச்னைகளை தீர்த்துக் கொண்டனர். இதன் காரணமாக அவர்களுக்குள் எழுந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது என தெரிவித்தார்.  நீதிபதிகள் அதிருப்தியை அரசியல் ஆக்குவதை யாரும் விரும்பவில்லை என்றார்.

நீதிபதிகள் பிரச்னைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொண்டதற்கு நன்றி என்று கூறிய மன்னன்,  சுப்ரீம் கோர்ட்டில் உள்ள அனைத்து நீதிமன்ற அறைகளும் வழக்கம் போல், நல்லமுறையில் செயல்பட்டு வருகின்றன. இதில் பார் கவுன்சிலின் பங்கு சிறியது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் நேற்று உச்சநீதி மன்றம் வந்திருந்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணு கோபால்   உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நான்கு மூத்த நீதிபதிகளுக்கு இடையிலான பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.