உச்சநீதி மன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது: முரண்டுபிடிக்கும் கிரண்பேடி

புதுச்சேரி:

யூனியன் பிரதேச அரசுகளுக்கும், துணைநிலை ஆளுநர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார போட்டி தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அதில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம். துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் கிடையாது என கூறியது.

இந்த தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்துக்கு பொருந்தாது என மாநில துணைநிலை ஆளுநரான கிரண்பேடி தெரிவித்து உள்ளார்.

தலைநகர் டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து வந்த அதிகார மோதல் காரணமாக,  கடந்த 2016-ஆம் ஆண்டு மாநில அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு கூறியது. அதில்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உரிமை என நீதிபதிகள்  தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்றமும் வரவேற்பு தெரிவித்திருந்தது.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் தெரிவிக்கும் விதமான புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, இன்று வாட்ஸ்அப் மூதல் பதில் தெரிவித்து உள்ளார். அதில், உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது.   சிறப்பான புதுச்சேரியை உருவாக்குவதே எனது நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரண்பேடி தனது  டுவிட்டர் பக்கத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் புதுச்சேரி குறித்த விபரங்களை செய்தி யாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்தி ஒன்றையும்.  மேற்கோள் காட்டியும், பதிவிட்டுள்ளார்.

அதில்,  புதுச்சேரியின் சட்டதிட்டம் டில்லி யூனியன் பிரதேச சட்டத்திட்டத்துடன் பொருந்தாது என்றும், அதிலி ருந்து மாறுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மற்ற யூனியன் பிரதேசங்களான  அந்தமான், நிகோபர் தீவுகள், டையூ, டாமன், லட்ச தீவுகளில் இருந்தும் வேறுபடுகிறது.

புதுச்சேரி சட்டப்பிரிவு 239 ஏ,-ன் கீழ் வரும். அதேசமயம் டில்லி சட்டப்பிரிவு 239ஏஏ.,-ன் கீழ் வரும் என தெளிவு படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கிரண்பேடியின் இந்த பதிவு  மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி  மாநில அரசுக்கும் துணை நிலை ஆளநருக்கும் இடையே மீண்டும் மோதல் உருவாகி  உள்ளது.