தமிழிலும் வெளியானது உச்சநீதி மன்ற தீர்ப்புகள்! தமிழர்கள் வரவேற்பு

டில்லி:

மிழகத்தின் கோரிக்கையை ஏற்று, உச்சநீதி மன்றம்,  தீர்ப்புகளை தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டு உள்ளது. உச்சநீதி மன்றத்தின் செயலுக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

மாநில மொழிகளிலும் தீர்ப்பு வெளியிடப்படும் என்று உச்சநீதி மன்றம் கடந்த மாதம் (ஜூன்) 3ந்தேதி அறிவித்திருந்தது. அப்போது,  7 மாநில மொழிகளில், தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டு பதிவேற்றப்படும் என கூறியது. இந்த 7 மொழிகளில், தொன்மையான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பதில் தெரிவித்த தமிழக சட்ட அமைச்சர், தமிழையும் இணைக்க அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில், தமிழ் மொழியிலும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் கிடைத்திட வேண்டும் என்றும், அதற்கான  மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்த்திடுமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை  விடுத்தார்.  மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்தும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தநிலையில், தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரம் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றம் அறிவித்தபடி, நேற்று உச்சநீதி மன்றத்தின் இணையதளத்தில், 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் பதிவேற்றப்பட்டு  வெளியிடப்பட்டன. அத்துடன்,  தமிழ் மொழியிலும் தீர்ப்புகள் பதிவேற்றப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த , மறைந்த பிரபல தொழிலதிபர் சரவணபவன் ராஜகோபால் வழக்கு உள்பட பல வழக்குகளின் தீர்ப்புகள்  தமிழில் வெளியிடப்பட்டு உள்ளது.