உச்ச நீதிமன்றத்துக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்ல வசதி – ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்

நாட்டின் உயரிய துறையான நீதித்துறையின் தலைமையகமான உச்ச நீதிமன்றத்துக்கு பொதுமக்கள் சுற்றுலா செல்லலாம். உச்சநீதிமன்றத்தின் மூலம் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பார்வையாளார்கள் தங்கள் சுற்றுலா நேரத்தை ஆன்லைனில் பதியவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Supreme_Court_EPS1

சுதந்திர இந்தியாவில் இந்தியப் பொறியாளரால் உருவாக்கப்பட்ட பெரிய கட்டிடங்களில் ஒன்று உச்ச நீதிமன்றம். இந்த வளாகம் இப்போது சுற்றுலாவுக்காக தனது கதவுகளைத் திறந்திருக்கிறது. வியாழக் கிழமை நீதிபதிகள் ஓய்வறையில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அப்போது, ” வரையறுக்கப்பட்ட வழிகளில் பொது நிறுவனம் அனைவரும் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என்னும் திட்டத்தின் அடிப்படையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது “ என நீதிபதி தெரிவித்தார். அதன்படி, உச்ச நீதிமன்ற வளாகத்தை இலவசமாகச் சுற்றிப் பார்க்கலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 1 மணி வரை செல்லலாம். அறிவிக்கப்பட்ட பொது விடுமுறைகளில் (சனிக்கிழமை) அனுமதி இல்லை.

ஒவ்வொரு முறையும் 20 நபர்கள் வழிகாட்டியுடன் அனுமதிக்கப்படுவர். வழிகாட்டி, உச்ச நீதிமன்றத்தின் கட்டிடக் கலை குறித்தும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வழக்குகள் குறித்தும் விவரிப்பார். நீதிமன்ற வளாகங்கள், நீதிபதிகள் நூலகம் ஆகியவற்றைப் பார்வையிடலாம். நீதிமன்றம் குறித்த குறும்படத்துடன் சுற்றுலா முடிவு பெறும்.

சுற்றுலாவின் போது புகை பிடிக்க, உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல, புகையிலைப் பொருட்கள் மற்றும் கேமராக்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா செல்லும் பார்வையாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் தங்களின் சுற்றுலாவை முன்பதிவு செய்யலாம்.

சுற்றுலா குறித்து வெளியான நீதிமன்ற அறிக்கையில், ” நாட்டின் உயரிய, பொறுப்புமிக்க உச்ச நீதிமன்றத்தின் மாண்பைக் காக்கும் வகையில் பார்வையாளர்கள் நல்லொழுக்கத்தைப் பேண வேண்டியது அவசியம் “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.