கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மெய்நிகர் நாணயம் (Virutal Currency), கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின்களில் வர்த்தகம் செய்வதற்கான தடையை இந்த உத்தரவு நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது..

ஏப்ரல் 6, 2018 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை தடைசெய்தது, இதன் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் மெய்நிகர் நாணயங்களைக் கையாளக்கூடாது.

ஏற்கனவே அத்தகைய சேவைகளை வழங்கிய ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்குள் அத்தகைய வர்த்தகத்தில் இருந்து வெளியேறும்படி அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டது.

இதுபோன்ற மெய்நிகர் நாணயங்களைக் கையாள்வதில் பல்வேறு ஆபத்துகள் குறித்து பிட்காயின்கள் உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களின் – பயனர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் வர்த்தகர்களை எச்சரிக்கும் சுற்றறிக்கைகளை ரிசர்வ் வங்கி இதற்கு முன்பும் வெளியிட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த ஏப்ரல் 6 சுற்றறிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் என்ற அமைப்பு பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் உள்ளவர்கள் சார்பாக இந்த வழக்கை தொடுத்திருந்தது.

இந்திய அரசியலமைப்பில் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்வதை தடைசெய்யும் சட்டம் இல்லாத நிலையில், இது “முறையான” வணிக நடவடிக்கை என்று வாதிட்டனர். இதுபோன்ற வர்த்தகத்தில் ஈடுபட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடைவிதிக்க முடியாது என்றும் கூறியிருந்தனர்.

வேறு எந்த முறையிலான பரிவர்தனையையோ, வங்கிகளின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிடும் எந்தஒரு செயல்பாட்டிற்கும், ரிசர்வ் வங்கி அனுமதிக்காது என்று தனது 2018 சுற்றறிக்கையை ஆதரித்தது ரிசர்வ் வங்கி.

இந்தியாவில் எந்தவொரு சட்டத்தின் கீழும் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை இல்லை என்றாலும், மெய்நிகர் நாணயங்கள் மற்றும் அவற்றை கையாளும் அனைவருக்கும் இதில் உள்ள அபாயங்களை உணர்த்தவே இதுபோன்ற எச்சரிக்கை விடுத்துவருவதாகவும், டிஜிட்டல் பரிவர்தனைகளின் ஒரு அங்கமாகவே இது கருதப்படும் என்றும் ரிசர்வ் வங்கி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவன் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். எப். நரிமன், அனிருதா போஸ் மற்றும் வி. ராமசுப்பிரமணியன் அடங்கிய பெஞ்ச், இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

“கிரிப்டோகரன்சி” என்பது ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றான கண்களால் பார்க்கமுடியாத, கைகளால் உணரமுடியாத, முற்றிலும் டிஜிட்டல் மயமான இணைய வர்த்தகத்தில் மட்டுமே பயன்படக்கூடிய கரன்சி.

ஊகசந்தையில் உலகின் மிக மதிப்பு வாய்ந்த கிரிப்டோகரன்சியான பிட்காயின் ஒன்றின் மதிப்பு சுமார் ரூ. 6,50,000. நாணய சந்தை முதலீட்டில் சுமார் ரூபாய் பன்னிரெண்டு லட்சம் கோடி கிரிப்டோகரன்சியாக முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : எகனாமிக் டைம்ஸ்