பாகிஸ்தானில் கோயில் குளத்தை தண்ணீர் ஊற்றி நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

 

இஸ்லாமாபாத்:

வறண்டு கிடக்கும் இந்து கோயில் குளத்தை ஒருவாரத்துக்குள் தண்ணீரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் மாகாணம் சக்வால் மாவட்டத்தில் கட்டாஸ் ராஜ் கோயில் உள்ளது. அதனைச் சுற்றி தொழிற்சாலைகள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சியதால் கோயிலுக்கு சொந்தமான குளம் வறண்டு போனது. இதையடுத்து கோயில் குளத்தை தண்ணீரால் நிரப்ப உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சகிப் நிஸார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் அரசுக்கு பிறப்பித்த உத்தரவில்,‘‘ கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு சொந்தமான வறண்டு போன புனித குளத்தை சக்வால் மாவட்ட நிர்வாகம் ஒருவாரத்துக்குள் நிரப்ப வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக தோல் பையில் தண்ணீரைக் கொண்டு வந்து அந்த குளத்தை நிரப்ப வேண்டிய நிலைமை இருந்தாலும் அதனை கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும். அந்த கோயில் ஹிந்து சமூகத்தினரின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடம் மட்டுமல்ல, அது நமது நாட்டு தேசிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியும் கூட’’ என்று தெரிவித்துள்ளார்.