போக்ஸோ வழக்கு: தனி நீதிமன்றம் அமைக்க உயர்நீதி மன்றங்களுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி:

நாடு முழுவதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க தனி நீதி மன்றங்களை உருவாக்குமாறு அனைத்து மாநில உயர்நீதி மன்றங்களுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும்  பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இந்த சட்டத்தின்படி கைது செய்யப்படும் குற்றவாளிகளை விசாரிக்க, தனி நீதி மன்றம் அமைக்க வேண்டும், என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று அனைத்து உயர்நீதி மன்றங்களுக்கும் உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில்,  12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வகையில் போக்ஸோ சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என கூறியிருந்தது.

அதைத்தொடர்ந்து, சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு  மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு  மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி,  இந்த அவசர சட்ட திருத்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 22ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்ஸோ சட்டத்தின்படி கைது செய்யப்படும் குற்றவாளிகளை விசாரிக்க தனி நீதி மன்றம் அமைக்க வேண்டும் என்றும், மாநில அரசை கலந்தாலோசித்து அதற்கான முயற்சியை உடனே தொடங்க வேண்டும் என்றும்  அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.