புதுடெல்லி: கடன் தவணைக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ள காலத்தில், அந்த தவணைகளுக்கான வட்டி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தத்தா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை செலுத்துவதற்கு முதலில் மூன்று மாதங்களும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் அடுத்த 3 மாதங்களும் அவகாசம் அளித்தன.
ஆனால், இந்த அவகாச காலத்தில் வட்டி கணக்கிடப்பட்டு கடன்தாரரின் கணக்கில் சேர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடன் தவணை செலுத்த சலுகையும் அளித்துவிட்டு அக்காலத்திற்கான வட்டியும் வசூலிப்பது நியாயமற்றது மற்றும் சட்ட விரோதமானது. ஏராளமானோர் ஊரடங்கால் வேலை இழந்துள்ள இந்த சூழலில், சலுகை கால வட்டியைக் கணக்கிடுவது கூட்டு வட்டி போன்றது.
இதனால் செலுத்த வேண்டிய கடன் அதிகமாகும். அத்துடன் தவணைக் காலமும் அதிகரிக்கும். எனவே கடன் தவணை சலுகைக் காலத்தில் வட்டி வசூலிக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.