‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!

டில்லி:

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு தடை விதிக்ககோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சித்தூர் ராணி பத்மினியின் கதை ஹிந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட் டுள்ளது. நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். கவிஞர் மாரிக் முகமது ஜெயாசி எழுதிய கவிதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படம் டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் இந்த படம் வெளியானால் குறிப்பிட்ட பிரிவினர் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் முடியும் வரை படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு பாஜக கடிதம் எழுதியது.

இந்நிலையில், பத்மாவதி படத்தைத் வெளியிட தடை கோரி, சித்தார்த் சிங் உள்ளிட்ட 11 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து கூறுகையில். ‘‘பத்மாவதி திரைப்படத்தை சென்சார் போர்டு பார்வையிட்டு உறுதி செய்துள்ளது. அதனால் இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டியது இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ எனக் கூறினர்.