டெல்லி:

இந்திய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கவுன்சிலில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, உச்சநீதிமன்றம் அமைத்த லோதா குழு சில பரிந்துரைகளை அளித்தது. இதை ஏற்க மறுத்த பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர், செயலர் அஜய் ஷிர்கே அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய மூத்த வக்கீல்கள் கோபால் சுப்ரமணியம், அனின் தவான் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்விகார் அடங்கிய அமர்வுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹித் திடீரென ஆஜராகி, பிசிசிஐ தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு. இந்த அமைப்பு கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. ஒரு கம்பெனி அல்லது டிரஸ்டின் நிர்வாகத்தை எப்படி நீதிபதியால் கட்டுப்படுத்த முடியும். இதனால் ரயில்வே மற்றும் சர்வீசஸ் அணிகள் வாக்குரிமையை இழக்கும்.

லோதா குழு பரிந்துரை குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும். அதோடு அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கின் விசாரணையை மாற்ற வேண்டும் என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து 9 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை வக்கீல் கோபால் சுப்ரமணியம் தாக்கல் செய்தார்.

இதில் லோதா குழு பரிந்துரைக்கு மாற்றாக 70 வயது நிரம்பியவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதிக எண்ணிக்கையில் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் வாதிட்டார். ஆனால், தீபக் மிஷ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. விளையாட்டு அமைப்பின் தன்னாட்சியை நாங்கள் சீர்குலைக்க முயற்சிக்கவில்லை. இதில் உள்ள தூய்மையற்ற உறுப்புகளை அகற்றுகிறோம்.

மேலும், மூத்த வக்கீல்கள் கோபால் சுப்ரமணியம், அனின் தவான் ஆகியோர் வழங்கிய பட்டியலில் 70 வயதை கடந்தவர்களின் பெயர்கள் இருப்பதால் இது தகுதியிழப்பு செய்யப்படுகிறது. குழுவுக்கான பெயர்களை வரும் 30ம் தேதி பரிந்துரை செய்யுமாறு அரசுக்கும், சில மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் நீதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள லோதா கமிட்டியால் தகுதி இழப்பு செய்யப்பட்டாத தற்போதைய நிர்வாகிகள் 3 பேரது பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.