டில்லி:

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமின் மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்ற நீதிபதி ரமணா தெரிவித்து உள்ளார்.

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் மீது,  சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணையின்போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடத்திய விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது சார்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சருமான கபில் சிபல் மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுமீதான விசாரணை இன்று காலை நீதிபதி ரமணா முன்பு நடைபெற்றது. அப்போது, சி.பி.ஐ  தரப்பிலோ சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டதை மறுத்தனர்.

சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் பெயர் இல்லாத நிலையில் எப்படி உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுக்க முடியும்? என்றும்,  விசாரணையின்போது பதிலளிக்கவில்லை என்பதை காரணம் காட்டி, தப்ப நினைக்கிறார் என எப்படி கூற முடியும்? இதே வழக்கில் பிறருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், எனக்கு மட்டும் ஏன் நிராகரிக்கப்பட்டது? என்று ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினார்.

மேலும்,  முக்கிய அந்தஸ்தில் இருக்கும் சிதம்பரம்,  நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்து விடுவேன் என்றும்,  ஆதாரங்களை அழித்து விடுவேன் என்றும் எப்படி கூற முடியும்?  என்று கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் முன்ஜாமின்  மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதி ரமணா அறிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கை உடனே விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. ஆனால், தற்போது,  அயோத்தி வழக்கு விசாரணை நடைபெற்றுவருவதால் உடனடியாக அந்த மனுவை விசாரிக்க முடியாது. பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், அயோத்தி வழக்கு விசாரணை நீடித்துக்கொண்ட இருந்ததால், மீண்டும் நீதிபதி ரமணா முன்பு விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால்,  ப.சிதம்பரம் முன் ஜாமின் மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று  நீதிபதி ரமணா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.