சபரிமலை தொடர்பான வழக்குகள்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

டில்லி:

பரிமலை விவகாரம் குறித்து உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை ஜனவரியில் விசாரிப்பதாக உச்சநீதி மன்றம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், சபரிமலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும், சபரிமலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்ததற்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை உடனே நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை  அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்த்து,  ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்பட ஏராளமான இந்து அமைப்புகள்  சார்பில் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அந்த மனுக்கள் மீது  அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து இருந்தது.

இதற்கிடையில் சபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதி மன்றம் 3 பேர் குழுவை அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கு தடை கேட்டும், சபரிமலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதி மன்றத்திற்கு மாற்றக்கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரப்பட்டது.

ஆனால், மனுவை உடனே விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்றம், மனுவை பட்டியலிட உத்தரவிட்டு உள்ளது.