அயோத்தி சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு: சுப்பிரமணியசாமி மனுவை விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு
டில்லி:
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் வழிபாடு நடத்த உரிமை கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரியிருந்தார்.
அவரது மனுவை தற்போது விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ராமர் கோவில் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சுப்பிரமணயின் சாமி, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கு பிரார்த்தனை செய்வதற்கான அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ளது. அதன்படி ராமர் பிறந்த இடம் என கருதப்படும் அயோத்தியில் இந்துக்களுக்கு பிரார்த்தனை புரிய அடிப்படை உரிமை உள்ளது எனவும் அந்த இடத்தில் கோவில் அமைத்து பிரார்த்தனை செய்ய உத்திரவிடக் கோரியும் கூறியிருந்தார்.
மேலும் இந்த வழக்கை மற்ற நில உரிமைகள் தொடர்பான வழக்குடன் விசாரிக்காமல், தனியாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், கோடை விடுமுறைக்கு பின், இதுகுறித்து ஜூலை மாதத்தில் உச்சநீதி மன்றத்தை அணுக கூறியது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று சுப்பிரமணிய சுவாமியின் மனுவை பரிசீலனை செய்தது.
அப்போது, சர்ச்சைக்குரிய இடமான அயோத்தியில் வழிபாடு நடத்துவது தொடர்பான சுவாமி யின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்ற அமர்வு, இதுபோன்ற மனுவை பின்னர் தாக்கல் செய்யுங்கள் என்று மனுவை தள்ளுபடி செய்தனர்.