புலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு

புதுடெல்லி:

புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். பலர் நடந்தும், சைக்கிளிலும், லாரிகள் என ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு சிறப்பு ரயில்இயக்கி வருகிறது.  புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஜூன் 3 வரை 4,228 சிறப்பு ஷராமிக் ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் 57 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 41 லட்சம் பேர் சாலை மார்க்கமாக சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதன் மூலம் 1 கோடி பேர் சொந்த ஊருக்கு திரும்பியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அடுத்த 15 நாட்களுக்குள் புலம்பெயர் தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.