டெல்லி:

பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக்கொன்ற குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக, ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே, கால்நடை பெண் மருத்துவரை 4 பேர் கொண்ட கும்பல், பலாத்காரம் செய்து கொலை செய்து எரித்த  வழக்கில்  4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் தப்பி ஓட முயன்றதாக கூறி என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

தெலுங்கானா மாநில போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், மனித உரிமை அமைப்பு உள்பட சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் என்கவுன்ட்டர் செய்த போலீஸார் மீது தனியாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, வழக்கறிஞர் பி.எல்.சர்மா, பிரதீப் சர்மா ஆகியோர் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுமீதான விசாரணை  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே  தலைமையிலான அமர்வில்  நடைபெற்றது. அப்போது, தெலங்கானா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, கிருஷ்ணகுமார் சிங் ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணையைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த தலைமைநீதிபதி பாப்டே, ஐதராபாத் என்கவுண்ட்டர் தொடர்பாக தெலங்கானா உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நாங்கள் பரிசீலிக்கிறோம். உண்மை என்ன என்பது குறித்து ஆராய  ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தலாம் என  கருதுகிறோம். விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதியை அமர்த்தி விசாரணையைத் தொடங்கச் சொல்வோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்குமீது நாளையும் விசாரணை நடைபெறும் என்று கூறினார்.