பிஎஸ்-4 ரக வாகனங்கள்: 2020 முதல் விற்பனைக்கு தடை! உச்சநீதி மன்றம்

டில்லி:

பிஎஸ்-4 ரக வாகனங்கள்  2020ம் ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி முதல் விற்பனைக்கும், பதிவு செய்வதற்கும் தடை விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

வாகன புகை உமிழ்வு விதி திட்டத்தின் படி பிஎஸ் 3, 4 என அடுத்தடுத்து விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது நாடு முழுவதும்  பிஎஸ் 4 விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த விதி முறைப்படி வாகனங்களை தயாரிக்க, 2020 ஆம் ஆண்டு ஜுன் வரை வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,  2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதிக்கு பின்னர் பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் தடை விதித்துள்ளது.

2020ஏப்ரல் 1ந்தேதி முதல்  பி.எஸ் 6 என்கிற மாசு கட்டுப்பாட்டுத் தரத்துக்கு வாகனங்கள் இருக்க வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஆனால் வாகன உற்பத்தியாளர்கள் 2020ம் ஆண்டு செப்டம்பர் வரை பி.எஸ் 4 ரக வாகனங்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர்.

அதே சமயம் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பி.எஸ் 4 வாகனங்களை விற்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தால் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்றம்,  பி.எஸ் 4 மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020ஏப்ரல் முதல் நாளுக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என அதிரடியாக உத்தரவிட்டனர்.