Random image

ரபேல் போர் விமான ஊழல்: உச்சநீதி மன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

டில்லி:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பாஜக அரசின் மீதான ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதில் மாபெரும் ஊழல் நடத்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும்  காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த  தகவல்களை மோடி அரசு வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது. ஆனால் மோடி அரசு ‘இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான ரகசியம் ஆகும். எனவே இதை பகிரங்கமாக வெளியிட இயலாது’ என்று மறுத்து வருகிறது.

இதுகுறித்து வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர்  உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஊழல்…?

2012-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.  ஆனால்  மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றதும், 2016-ம் ஆண்டில் ரூ.560 கோடி என்பது  ரூ.1,600 கோடியாக அதிகரித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதன் காரணமாகவே போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான  போர் விமானங்களை கொள்முதல் செய்வதில், அரசின்  கொள்கையை மீறி இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாகவும்,  ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், மத்திய அரசிடம் இருந்து தேவைப்படும் ஆவணங்கள் கிடைக்கும் வரை கோர்ட்டுக்கு செல்ல மாட்டோம். ஆவணங்கள் எங்களது கைகளுக்கு வந்தவுடன் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்” என்று காகிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.