புதுடெல்லி: பாதுகாப்புத் துறை சார்ந்த கண்காட்சிக்காக, உத்திரப்பிரதேச மாநிலத்தில் 64,000 மரங்கள் வெட்டப்படவுள்ளதையடுத்து, மாநில அரசு மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில், லக்னோ அருகே கோமதி ஆற்றங்கரையில் பாதுகாப்பு சார்ந்த கண்காட்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதற்கான இடத்தைப் பெறுவதற்கு வசதியாக, அப்பகுதியிலுள்ள கிட்டத்தட்ட 64000 மரங்களை வெட்டி, அந்த காலியிடத்தை இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து, லக்னோ நகர நிகாமிடம், லக்னோ மேம்பாட்டு ஆணையம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தது. வரும் ஜனவரி 15ம் ‍தேதிக்குள் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மரங்கள் வெட்டப்பட்டு, காலியிடம் ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர், கண்காட்சி முடிந்ததும் அதேஇடத்தில், ரூ.59 லட்சம் செலவில் புதிய மரக்கன்றுகள் நடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய பாதுகாப்புத் துறை மற்றும் மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.