டில்லி:

இந்தியாவுக்கு ஆண்டுதோறும் லட்சகணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் தாஜ்மகால் முக்கிய சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகால் நிறம்மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி. மேத்தா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொழிற்சாலைகள் புகையால் தாஜ்மகால் பொலிவு மேலும் மங்கிவிடாமல் தடுக்க வேண்டும். யமுனை ஆற்றங்கரையில் உள்ள மரங்களை வெட்டாமல் தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘முதலில் தாஜ்மகால் பழுப்பு நிறமாக மாறியது. இப்போது பச்சையாகவும், அடர் சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது.

தாஜ்மகால் மாசுபடுவதில் இருந்து பாதுகாக்க தேவையான நிபுணர்கள் இல்லையா?. அல்லது, இருந்தும் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லையா?. தாஜ்மகால் எப்படியாவது போகட்டும் என்று முடிவு எடுத்துவிட்டீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினர். ‘‘உங்களிடம் நிபுணர்கள் இல்லை என்றால் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையை பெறுங்கள்’’ என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்