டெல்லி:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  குற்றவாளிகளின் 2 பேர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 14-ந்தேதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு, 23-வயதான மருத்துவக் கல்லூரி மாணவி டெல்லியில் இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே  தூக்கி வீசப்பட்டார்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 2012ம் ஆண்டு  டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவன் மட்டும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டார். மற்றொருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மற்ற 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ந்தேதி காலை 7 மணிக்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் கடந்த 7ந்தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது.  அன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றவும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், தூக்கு தண்டனை கைதிகளான,  வினய் சர்மா மற்றும் முகேஷ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில்  சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சீராய்வு மனுக்கள் மீது,  நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர் எஃப் நாரிமன், ஆர்.பானுமதி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய  மீதான விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.