ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடை இன்றோடு முடிவதால், முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுமா அல்லது தடை விலக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அதிமுகவை சேர்ந்த இன்பதுரை வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி அத்தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், கடைசி 3 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து இன்பதுரை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இன்பதுரை, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கும் படி தனது மனுவில் கூறியிருந்தார். ஆனால், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இடைத்தேர்தல் நடைபெறுவதால் முடிவுகளை 23ம் தேதி வரை வெளியிட தடை விதிப்பதாக தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றம் விதித்த தடை இன்றோடு முடிவடையும் நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக வென்றுவிட்டதாக அப்பாவு தரப்பில் தகவல் கசிந்த நிலையில், முடிவகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை விலக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.