டெல்லி:

யோத்தி ராமஜென்மபூமி தொடர்பான வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

அயோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி தொடர்பான மேல்முறையீடு வழக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் ஷரத் அர்விந்த் பாப்டே, அஷோக் பூஷன், சந்திரசூட் மற்றும் அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. தொடர்ந்து  40 நாட்கள் விசாரணைக்கு பிறகு 5 நீதிபதிகளும் ஒருமனதாக  கையெழுத்திட்டு நவம்பர் 9ந்தேதி  வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை  வழங்கினர்.

அதன்படி, அயோத்தி ராமஜென்ம பூமி நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும்,  அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் கொடுங்கள் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.

இதற்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உள்பட  18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த 18 மனுக்களில் 9 சீராய்வு மனுக்கள் மட்டும், வழக்கில் தொடர்புடையவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மற்ற ஒன்பது சீராய்வு மனுக்களும், புதிய நபர்களால் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.