டில்லி: 

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம்  இன்று தீர்ப்பு வழங்குகிறது.

நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.
குஜராத் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐ நீதிபதி மரணம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து உள்ளது.

குஜராத்தில், சொராபுதீன் ஷேக் என்பவரை, ஆயுதம் கடத்திய வழக்கில், 2005ல் போலீசார் கைது செய்தனர். அவர், 2005 நவம்பர் மாதம் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இவரை போலீசார், ‘என்கவுன்டர்’ செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பி.எச்.லோயா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெயர் சேர்க்கப்பட்டிருந்து. இதன்  காரணமாக நீதிபதி லோயோவுக்கு பல தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு  மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரு திருமணத்துக்கு சென்றபோது, நீதிபதி லோயோ திடீரென மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அவர்  மாரடைப்பால் உயிர் இழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, லோயா மரணம் தொடர்பாக, சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து உள்ளது.