டில்லி:

மிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு (2018) மே மாதம் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. அப்போது காவல் துறையினர் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்து அரசாணையும் வெளியிட்டது.

தமிழக அரசின்  அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதைத்தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த  நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என அறிக்கை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கடந்த ஆண்டு (2018) டிசம்பர் 15ம் தேதி உத்தரவிட்டது.  இது தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து  தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழக்கை இன்று விசாரிக்கிறது.