மணல் இறக்குமதி வழக்கு: இறுதி விசாரணை 26-ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

டில்லி:

ணல் இறக்குமதி தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையை வரும் 26-ந் தேதிக்கு வைத்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு .

தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடுவது மற்றும் வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்வது  தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுக்கு தடை விதித்திருந்த உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, இறக்குமதி செய்யப்பட்ட மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சாலை வழியாக எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது என்றும், கடல் மார்க்கமாக கேரளாவுக்கு கொண்டு செல்ல ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார்.

மேலும் அந்த மணலில் சிலிக்கா என்ற பொருள் அடங்கி இருப்பதால், அதை கட்டுமானத்துக்கு பயன்படுத்த முடியாது என்றும் கூறினார்.

மணல் இறக்குமதியாளர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித் குமார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.