உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா அஜித் பவார்?

மும்பை:

காராஷ்டிரா முதல்வராக பதவி ஏற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ், நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவு அளித்து, துணைமுதல்வர் பதவி பெற்ற அஜித்பவார், தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது தனிமரமாக உள்ள அஜித்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இப்போவாவது, அவர் தனது நிலையை எண்ணி, துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் நீடித்து வரும் அரசியல் குழப்பத்திற்கு இடையில், தேசியவாத ஜனநாய கட்சியின் சட்டமன்ற தலைவர் அஜித்பவார், பாஜகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து,  கடந்த சனிக்கிழமையன்று (23-11.2019) காலை, திடீர் திருப்பமாக, மாநிலத்தில் பாஜக கூட்டணி  அரசு பதவி ஏற்றது. பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்  தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம், நாளை மாலை 5 மணிக்குள் தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்களில்,  53 பேர் ஏற்கனவே மீண்டும் சரத்பவாரிடம் திரும்பி விட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் பதவியில் இருந்தும், கொறடா பதவியில் இருந்தும், அவரை கட்சி நீக்கி உள்ளது.

தற்போது தனிமரமாக உள்ள அஜித்பவாரின் நிலை கவலைக்குரியதாகவும், கேள்விக்குறியதாகவும் உள்ளது. இந்த நிலையில்தான் உச்சநீதி மன்றமும் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதன் காரணமாக அஜித்பவார், தனது துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. அங்கிருந்து வெளியாகும் ஊடகங்களும், அஜித்பவார் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றே கூறி வருகின்றன.

இதை உறுதிப்படுத்தும் வகையில், அஜித்பவார் இன்று காலை அரசு சார்பில் நடைபெற்ற மும்பை தாக்குதல் நினைவு தினத்தை புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால்,  அஜித்பவாரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொறடா பதவியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நீக்கி யிருப்பதை, சட்டமன்ற செயலகம் ஏற்க மறுப்பதாக தெரிவித்து உள்ளது. கொறடா பதவியை நீக்கவோ, மாற்றவோ சபாநாயகருக்கு மட்டுமேஅதிகாரம் உள்ளது என்று தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.