சென்னை:

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு மனுமீது உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு (2018) மே 22ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து,  காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பள்ளி மாணவி உள்பட 13 பேர் இறந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வா கம் தேசிய பசுமையத்தில் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், தமிழக அரசு பசுமை தீர்ப்பாய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்று தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில்,  தூத்துக்குடி நகர் முழுவதும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.   நகர் முழுவதும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செயல்பட்டிருந்தன.

இந்த நிலையில்,  இன்று காலை செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதே தமிழக மக்கள் மற்றும் அரசின் நிலைப்பாடு.
எனவே, ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புவதாக தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப தீர்ப்பும் மக்களுக்கு சாதகமாக வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என்ற உச்சநீதி மன்றம்,

ஸ்டெர்லைட்டை திறக்க தடை விதித்த  உச்சநீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவையும் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தை நாட வேதாந்தாவுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தீர்ப்பின் நகல் கிடைத்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.