உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் – புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி
யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
டில்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரமா? அல்லது மாநில அரசுக்கு அதிக அதிகாரமா? என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது.
அதில், “ஆளுநர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை மதித்து செயல்பட வேண்டும். இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறியது.
இது குறித்து புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமி கூறியதாவது:
“யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை தீர்ப்பு தெளிவுப்படுத்தியுள்ளது. ஆளுநருக்கு உள்ள அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும்” என்று தெரிவித்தார்.