Random image

சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்….உச்சநீதிமன்றம்

டில்லி:

சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் எப்.டி.சி. மருந்துகள் என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துகளை இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சோதனை செய்தது. அப்போது 344 வகையான மருந்துகள் குறிப்பிட்ட விகித சேர்க்கை இன்றியும், அலட்சியமாகவும் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

2015-ம் ஆண்டு இந்த மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சில மருந்து நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மருந்துகளின் தயாரிப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு கடந்த டிசம்பரில் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் மீண்டும் ஆய்வு செய்து 328 வகையான மருந்து தயாரிப்பில் மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த மருந்துகளை தடை செய்ய நிபுணர் குழு பரிந்துரைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த மருந்துகளை தயாரித்தல், விற்பனை மற்றும் வினியோகத்துக்கு மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தடை விதித்தது. இவை பெரும்பாலும் வலி நிவாரணிகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கிருமி நாசினிகள் ஆகும். இதில் பிரபல தலைவலி மாத்திரையான சாரிடானும் இடம்பெற்றது.

இந்நிலையில் மத்திய அரசின் தடைக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. முதற்கட்டமாக சாரிடான், டார்ட் வலி நிவாராணி, பிரிட்டான் ஆகிய 3 மருந்துகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.