காணொலி காட்சி வழியே உச்சநீதிமன்றத்தின் முதல் வழக்கு விசாரணை…

டெல்லி

        இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழலில் உச்சநீதிமன்றம் காணொலி காட்சி வழியே தனது முதல் வழக்கு விசாரணையை நடத்தியுள்ளது.

   பிரதமர் ஊரடங்கு உத்தரவு அறிவித்த பின்பு அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் தங்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

   இந்நிலையில் இந்திய நீதித்துறையின் உயர் பீடமான உச்சநீதிமன்றமும்,  உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை  உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களின் செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்திருந்தது. மேலும் நீதிமன்றங்களுக்கு வழக்குரைஞர் உள்ளிட்ட எவரும் நுழையத் தடைவிதித்தது. 

   ஆனால் தவிர்க்க முடியாத முக்கிய வழக்குகளை உச்சநீதிமன்றம் காணொலி காட்சி மூலம் விசாரிக்கும் எனத் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்தே தெரிவித்தார். இதற்குரிய முறையான அறிவிப்பை உச்சநீதிமன்றத்தின் இ கமிட்டித் தலைவர் D.Y.சந்திரசத் வெளியிட்டார்.

       நீதிபதி H.J.M.L.நாகேஸ்வர் ராவ் அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடந்தது. Vidyo ஆன்லைன் ஸ்டீரிம் மூலம் இந்த வழக்கு நடைபெற்றது. வழக்கின் நேரடி ஒளிபரப்பை செய்தியாளர்கள் காண்பதற்கு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அங்கு  மூன்று செய்தியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

   வழக்கின் விசாரணை முடிந்தபின்பு அது குறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன்,  விசாரணை மிக நன்றாகவும் தடையின்றியும் நடைபெற்றதாகக் கூறினார். இதில் வழக்குரைஞர்கள்          தங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து விசாரணையில் பங்கேற்கலாம். ஸ்கைப், வாட்ஸ்அப், ஃபேஸ்டைம் ஆகிய இணைய முறைகளில் நீதிமன்ற நிலவரங்களை அறியவும் வழி செய்யப்பட்டுள்ளது.

   இந்திய நீதித்துறையில் அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் இருக்கும் சூழலில் உச்சநீதிமன்றத்தின் இந்த முயற்சி மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகத் திகழ்கிறது.