சூரத் : 43 நிலத்தடி குப்பைத் தொட்டிகள் அமைப்பு
சூரத்
இந்தியாவில் முதல் முறையாக சூரத் நகரில் 43 இடங்களில் நிலத்தடி குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக சாலை மற்றும் தெரு ஓரங்களில் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. இவைகள் இடத்தை அடைத்துக் கொள்வதால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளன. அத்துடன் குப்பைகளில் உள்ள தண்ணீர் வெளியே சிந்தி சுகாதாரக் கேடுகள் உண்டாகின்றன. இதை தடுக்க குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி ஒரு புதிய முறை கண்டுபிடித்துள்ளது.
அந்த நகரில் 43 இடங்களில் நிலத்தடி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதாவது சாலை மற்றும் தெருக்களில் குழி தோண்டி அதில் இந்த குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. குப்பைகளை கொட்ட இரு திறப்புகள் உள்ளன. அவைகளின் மூலமாக கழிவுகளை உள்ளே போட முடியும்.
சுமார் ஒன்றரை டன் குப்பைகளை கொட்டக்கூடிய இந்த குப்பைத்தொட்டிகளில் சென்சார்கள் பொருத்தப் பட்டுள்ளன. குப்பைத் தொட்டி 70% நிரம்பிய உடன் கட்டுப்பாட்டு அறைக்கு சென்சார்கள் தகவல்கள் அனுப்பும். அதனால் கழிவுகள் தொட்டியுடன் அகற்றப்பட்டி மற்றொரு தொட்டி பொருத்தப்படும். அந்த தொட்டி சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் உபயோகிக்க தயாராகும்.
இவ்வகை குப்பை தொட்டிகளால் குப்பைகள் வெளியே சிந்தாது. மேலும் துர்நாற்றம் காற்றில் பரவாது. சூரத் மநகராட்சி ஆணையர் இதே போல மற்ற பகுதிகளிலும் வைக்க சிபாரிசு செய்துள்ளார்.