சூரத்: பூங்கா மற்றும் போக்குவரத்து நிறைந்த பொது இடங்களில், கேக் வெட்டி, நுரைகளைப் பறக்கவிடும் தேவையற்ற பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்து, சூரத் மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொது இடங்களில் நடத்தப்படும் இதுபோன்ற கொண்டாட்டங்களால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, விளையாட்டுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் பிறர் தாக்கப்படும் சம்பவங்களும் நிகழ்வதால், இத்தகைய கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்படுவதாய் கூறப்படுகிறது.

எனவே, இந்த தடையுத்தரவை மீறி, ‍பொது இடங்களில் மேற்கண்ட முறையிலான கொண்டாட்டங்களில் ஈடுபடும் யாரையும் கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு.

பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தல் மற்றும் பிறருக்கு ஊறு விளைவித்தல் போன்ற செயல்களை தடுக்கவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாய் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த தடையுத்தரவு ஜுலை 12ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.