Random image

ஜிஎஸ்டி : சூரத் நகர ஜவுளி வர்த்தகர்கள் பஜ்ஜி விற்று போராட்டம்

சூரத்

சூரத் நகரில் ஜி எஸ் டி அமுலாக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியதை ஒட்டி ஜவுளி வர்த்தகர்கள் பஜ்ஜி விற்று போராட்டம் நடத்தினர்.

கடந்த வருடம் ஜூலை 1 ஆம் தேதி மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தியது.    ஆரம்பத்தில் இருந்தே குழப்பத்தில் இருந்த அந்த வரிமுறை அடிக்கடி மாற்றப்பட்டு மேலும் குழப்பத்துக்குள்ளாகியது.  அது மட்டும் இன்றி ஜிஎஸ்டி கணக்குகளை பதிவதில் ஒரு வருடம் ஆகியும் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

இந்த ஜிஎஸ்டி வரியால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி வர்த்தகர்கள் தெரிவித்து வருகின்றனர்.    குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் ஜவுளி வர்த்தகர்கள் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் உள்ளனர்.   இவர்கள் அனைவரும் ஜிஎஸ்டி வரி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஜி எஸ் டி அமுலாக்கப்பட்ட முதலாண்டு நிறைவு விழா அரசால் விமரிசையாக கொண்டாடப்பட்டது.   அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சூரத் நகர ஜவுளி வர்த்தகர்கள்  பஜ்ஜி தயாரித்து விற்று போராட்டம் நடத்தினர்.

அப்போது சூரத் நகர ஜவுளி வர்த்தகர்களின் தலைவர் ரையின் தாடெட், “சூரத்தில் மட்டும் பல ஜவுளி வர்த்தகர்கள் ஜி எஸ் டி அமுலாக்கத்துக்குப் பின் தங்கள் கடைகளை மூடி உள்ளனர்.   அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   ஒரு சிலர் மட்டுமே வேறு வர்த்தகத்தை தொடங்கி உள்ளனர்.   இன்னும் ஆறு மாதங்களில் ஜவுளி வர்த்தகம் முழுவதுமாக அழிந்து விடும் என்னும் அச்சம் உள்ளது.”  என வருத்ததுடன் கூறி உள்ளார்.