மந்திரி மகனைத் தட்டிக்கேட்ட பெண் போலீஸ் ‘டிரான்ஸ்பர்’..

குஜராத் மாநிலம் சூரத் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சுனிதா, சில தினங்களுக்கு முன்னர் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தார்.

ஊரடங்கு அமலில் இருந்ததால்,  சாலையில் திரிந்த இருவரிடம் சுனிதா விசாரணை நடத்த,  அப்போது அவர்களின் நண்பரான மாநில அமைச்சர் குமாரின் மகன் பிரகாஷ் அங்கு வந்துள்ளார்.

அப்போது சுனிதாவுக்கும், மந்திரி மகன் பிரகாஷ் உள்ளிட்ட மூவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.

ஒரு கட்டத்தில், சுனிதாவிடம் ‘’ நான் நினைத்தால் உன்னை இதே இடத்தில் 365 நாட்கள் நிறுத்தி வைக்க முடியும்’’ என பிரகாஷ் எச்சரித்து விட்டுச் சென்றுள்ளார்.

பெண் போலீசை மந்திரி மகன் மிரட்டும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதால், ஒப்புக்காக மந்திரி மகன் பிரகாஷ் உள்ளிட்ட மூவரையும் போலீசார்  கைது செய்தனர். எனினும்  அவர்களை உடனடியாக பிணையில் விடுவித்து விட்டனர்.

ஆனால் மந்திரி மகனுடன் வாக்குவாதம் செய்த சுனிதாவுக்கு, ‘டிரான்ஸ்பர் ஆர்டர்’ கொடுக்கப்பட்டு,  போலீஸ் தலைமையகத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிக்குத் தண்டனை?

-பா.பாரதி