திருச்சி வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளை: பணம் பதுக்கப்பட்ட இடம் தெரிந்தது ?

திருச்சியில் வங்கி மற்றும் நகைக்கடையில் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கி வைத்துள்ளதாக கொள்ளையன் சுரேஷ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் சுவரில் துளைப்போட்டு, 13 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் உள்ளிட்டவை சமீபத்தில் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் அவர்களுக்கு தொடர்பு இருப்பது சில நாட்களுக்கு முன்பு தெரியவந்தது. நேற்று கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றை மீட்ட காவல்துறையினர், தொடர்ந்து சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தான் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கிவைத்துள்ளதாக காவல்துறையிடம் சுரேஷ் தெரிவித்ததாகவும், இதனை தொடர்ந்து சுரேஷை திருவண்ணாமலைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்துச்செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்ட்டூன் கேலரி