அசோக்குமார் தற்கொலை… இயக்குநர் பாலா – நடிகர் சசிகுமாருக்கு பொறுப்பில்லையா?:  : இயக்குநர் & தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கேள்வி!

 

அசோக்குமார் – அன்பு

சிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவன பொறுப்பாளருமான அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு கந்துவட்டியே காரணம் என்றும் பிரபல ஃபைனான்சியர் அன்புவின் மிரட்டலை அடுத்தே தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர் எழுதியதாக ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ்காமாட்சி நம்மிடம் தெரிவித்ததாவது:

சுரேஷ்காமாட்சி

“ஃபைனான்சியர் அன்புவின் கந்துவட்டி மிரட்டலால் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து விரிவாக பேச வேண்டும்.

தாரைத்தப்பட்டை படத்துக்காகத்தான் சசிகுமார், அன்புவிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார்.  அன்பு வட்டி தொழிலை, முறையாக செய்து வருகிறார்..  கொடுத்த பணத்தைத் திருப்பித்தரவில்லை  என்றால் கேட்கத்தானே செய்வார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், சம்பளம் தராவிட்டால், டப்பிங் பேச வருவார்களா.. மறுப்பார்கள்தானே.. அதுபோல, தனக்கான பணம் வரவில்லை என்றால் கேட்கிறார்.

பாலா – சசிகுமார்

திரைத்துறையில் பெரும்பாலும் பணமே இல்லாமல்தான் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருகிறார்கள். வட்டிக்கு வாங்கித்தான் படங்கள் உருவாகின்றன. வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை ஒழித்துவிட்டால், திரைப்படங்கள் தயாரிப்பதே முடியாமல் போய்விடும். திரைத்துறையே அழிந்துவிடும்.

சசிகுமாருக்கு எப்படி இந்தக் கடன் வந்தது.? தயாரிப்பாளராக அவரது திட்டமில் தவறு. அதே போல,இயக்குநர் பாலா, உரிய காலத்தில் திட்டமிட்டு படத்தை முடித்திருந்தால், படச் செலவு அதிகரித்திருக்காது. ஆகவே அவர் மீதும் தவறு.

இதையெல்லாம் விட்டுவிட்டு ஃபைனான்சியர் அன்புவின் மீது மட்டும் குறை சொல்வது தவறு. அவருக்கு மனிதாபிமானம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். கசாப்புகடையில் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கக்கூடாது. அப்படி எதிர்பார்ப்பவர்கள் ஃபைனான்சியர்களை நாடக்கூடாது.

நான் கந்துவட்டிக்கு ஆதரவானவன் இல்லை. அதே நேரம், திரைத்துறையில் கந்துவட்டி இல்லை என்பதையும் சொல்வேன். எத்தனையோ சமயங்களில் படத்தயாரிப்பாளர்கல் வட்டிப்பணத்தைத் தர முடியாத நிலையில், ஃபைனான்சிர்கள் பெருந்தன்மையுடன் பொறுத்துக்கொண்டு படத்தை வெளியிட உதவியிருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது” என்றார் சுரேஷ் காமாட்சி.