ரஜினி , விஜய் எல்லாம் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வரும்போது, உங்களுக்கென்ன ? : சுரேஷ் காமாட்சி காட்டம்

த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள படம் படம் ‘பரமபதம் விளையாட்டு’.இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் திருஞானம், இசையமைப்பாளர் மானஸி, விஜய் வர்மா ஆகியோருடன் தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது : “15 நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்தேன் .0 படங்கள் இயக்கிய இயக்குநர் மாதிரி இந்தப் படத்தை இயக்குநர் திருஞானம் இயக்கியிருந்தார்.

இசை வெளியீட்டு விழா என்றால் படத்தில் நடித்தவர்கள்தான் வருவார்கள். ஆனால், இங்கு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நண்பர்களாக வந்து உட்கார்ந்திருக்கிறோம். படத்தின் விளம்பரத்துக்கு வரவில்லை என்றால் அவர் பெரிய நடிகர் என்பது ட்ரெண்டாகி விட்டது. ரஜினி சார், விஜய் சார் ஆகியோர் எல்லாம் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வரும்போது, இவர்கள் எல்லாம் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை.

அவர்களை இந்த இடத்துக்குக் கொண்டு போய் விட்டதே ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் தான். கோடிகளில் போட்டு உங்களை ஏன் வைத்துப் படமெடுக்கிறோம் என்றால், முன்னணியாக இருப்பதால் மட்டுமே.

குறைந்தபட்சம் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்குப் போக வேண்டுமே என்ற பொறுப்பு வேண்டாமா? ஏன் யாரையுமே சந்திக்காமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்னதான் பிரச்சினை?

உங்களுக்குச் சம்பளம் கொடுத்துப் படமெடுத்தால், நீங்கள் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வருவீர்கள், ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதுதான் காரணம்” என பேசினார் .