சென்னை:

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதனால் பலத்த பாதுகாப்புடன் போட்டி நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்து நடக்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு சிஎஸ்கே வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா இது குறித்து டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘சொந்த மைதானத்தில் விளையாடி சென்னை ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்யும் வாய்ப்பை தவற விடுகிறோம். எனினும் புனேயில் போட்டிகள் நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எப்போதும் எங்களது இதயத்தில் இருப்பார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டுவிட்டர் பதிவில்,‘‘ஐபிஎல் முதல் போட்டி நடந்த சூழ்நிலையை நான் அதிகம் விரும்பினேன். எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த ஐபிஎல் சீசனில் அடுத்த போட்டிகள் எதிலும் இங்கு நாங்கள் விளையாடபோவதில்லை என்ற முடிவு என க்கும், அணியினருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிர ச்னை விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

வாட்சன் பதிவுக்கு சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாகீர் கவலை தெரிவித்து பதிவிட்டுள்ளார். பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹூஸே, தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் உள்ளிட்டோரும் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.