ஜெய்ப்பூர்

மோடி அரசுக்கு முன்பே பல சர்ஜிகல் ஸ்டிரைக்குகள் நடந்துள்ளதாக 2016 ஆம் வருட சர்ஜிகல் ஸ்டிரைக் நாயகன் ஹுடா தெரிவித்துள்ளார்.

எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தி அவர்களை அடியோடு அழிக்கும் நடவடிக்கையை சர்ஜிகல் ஸ்டிரைக் என குறிப்பிடுவது வழக்கமாகும். பாஜக அரசு அவ்வாறான ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கையை 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 அன்று நடத்தியது. இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கையில் பல தீவிரவாத முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டன.

பாஜகவினர் இந்த நடவடிக்கை முதன் முதலாக மோடியின் ஆட்சிக் காலத்தில் நடந்ததாக கூறி வருகின்றனர். இதை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மறுத்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியிலும் பல முறை சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெற்றுள்ளதாகவும் அது ராணுவ ரகசியம் என்பதால் வெளியில் சொல்லப்படுவதில்லை எனவும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

அதை ஒட்டி பாஜக செய்தி தொடராளர் நரசிம்ம ராவ் ஜெய்ப்பூரில், “கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று இந்தியா தனது முதல் சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்தியது. அதற்கு முன்பு இவ்வாறு நடந்ததில்லை. இந்த தகவலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ராணுவ நடவடிக்கை இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸார் தங்கள் ஆட்சியிலும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்ததாக சொல்கின்றனர்.

அதுவும் ஒவ்வொரு தலைவரும் இது குறித்து ஒவ்வொரு தகவலை வெளியிடுகிறார். ஒரு தலைவர் இரு முறை நடந்ததாக கூறுகிறார். மற்றவர் ஆறு முறை நடந்ததாக தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் 10 முறை நடந்ததாக கூறுகின்றனர். காங்கிரஸ் தனது தலைமை அலுவலகமான எண் 24, அக்பர் சாலையில் இருந்து இந்த தாக்குதல்களை நிகழ்த்தியதா?” என கேட்டுள்ளார்.

இதற்கு 2016 ஆம் வருட சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்திய ராணுவ தலைவர் ஹூடா, “சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற ராணுவ நடவடிக்கைகள் எந்த கட்சிக்கும் பெருமை அளிப்பவை அல்ல. ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கைகள் நடப்பது வழக்கமான ஒன்றாகும்.

கடந்த 2008 ஆம் வருடம் ஜூன் 18 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள பட்டால் செக்டரில் நடந்தது.  அடுத்து 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நீலம் நதிக்கரையில் உள்ள சாரதா செக்டரில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்தது. அதன் பிறகு 2013 ஆம் வருடம் ஜனவர் ஆறாம் தேதி அன்று சாவன் பத்ரா போஸ்ட் பகுதியில் நடந்தது.

இதைத் தவிர 2013 ஆம் வருடம் ஜுலை 27 மற்றும் 28 அன்று நசபூர் செக்டரிலும் 2013 ஆம் வருடம் ஆகஸ்ட் ஆறு மற்றும் 2014 ஆம் வருடம் ஜனவரி 14 ஆகிய தேதிகளில் மீண்டும் நீலம் நதிக்கரையிலும் இவ்வித நடவடிக்கைகள் நடந்தன.

இவ்வாறான சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கைகள் பாஜக பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியிலும் இரு முறை நடந்துள்ளது. எனவே மோடி அரசில் இந்த நடவடிக்கைகள் முதலில் நடந்ததாக பாஜகவினர் தெரிவிப்பது தவறாகும்.” என தெரிவித்துள்ளார்.