தேர்வுக்குழு மீது பிரபல கிரிக்கெட் வீரர் புகார்: வாரியக்குழு தலைவர் அதிர்ச்சி

ணியில் இருந்து நீக்கப்படுவது குறித்த தகவலை தனக்கு யாரும் தெரிவிக்கவில்லை என்று பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது  என்று இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்திருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆரம்பித்தது.  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அறிமுக வீரர் பிருத்வி ஷா அதிரடி சதம் அடித்தார்.  நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராத் கோலியும் (72 ரன்) விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட்டும் (17 ரன்) களத்தில் இருக்கின்றனர்.

பிரசாத் -முரளி விஜய்

இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்த அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு மோசமான விளையாட்டு காரணமாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில்முரளி விஜய்யும் தேர்வு குழு மீது புகார் கூறியிருந்தார்.

அவர், “இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நான் நீக்கப்பட்ட பிறகு என்னிடம் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவரோ, உறுப்பினர்களோ தொடர்புகொண்டு பேசவே இல்லை. இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்து இருந்த அணி நிர்வாகிகளிடம் இது குறித்து பேசினேன். ஆனால் உரிய பதில் அளிக்கப்படவில்லை.

அணி வீரர்கள் தேர்வுக்கு எந்த மாதிரியான அளவுகோல் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது என்று ஹர்பஜன்சிங் கூறிய கருத்து சரிதான்.  அணியில் இருந்து ஒரு வீரரை நீக்கும் போது அதற்கான காரணத்தை அந்த வீரரிடம் சொல்வது அவசியம்.  அப்போதுதான் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதை அறிந்து அதற்கு தகுந்தபடி ஆட்டத்தை மேம்படுத்த முடியும் என்று முரளிவிஜய் கூறியிருந்தார்.

இதுபற்றி  கருத்து தெரிவித்த தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், “அணியில் இருந்து நீக்கப்படுவது தொடர்பாக, யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று முரளி விஜய் சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. தேர்வு குழுவைச் சேர்ந்த தேவங் காந்தி ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதை அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தார். பிறகு எப்படி இதைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “இங்கிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்ட பின் முரளி விஜய், கவுன்டி கிரிக்கெட்டில் எப்படி பங்கேற்றார்? நாங்கள் பேசாமலா இது நடந்தது? இந்திய கிரிக்கெட் வாரியம்தான் அதை செய்து கொடுத்தது. விஜய் ஆட்டத்தில் கவனம் செலுத்தவேண்டும். தேவையில்லாததை பேச வேண்டியதில்லை”  என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்த கருண் நாயருக்கு தற்போதைய டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.  அவரும்  தேர்வுக் குழுவினர் மீது குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி